வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - எங்கெல்லாம் பாதிப்பு தெரியுமா?
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தெற்கு அந்தமான் வரை கடல் மட்டத்தில் இருந்து 5.8 கி.மீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மிகத்தீவிரமாக இருப்பதாக இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தெரியவந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமான ஒன்றாக இருக்கிறது. இந்த குறைந்த காற்றழுத்தம் மிக விரைவாக காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறி இருந்தது.
அதற்கு ஏற்ப புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மிக வேகமாக வலுப்பெற்று வருகிறது. அந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர உள்ளது. நாளை தமிழக கடலோரம் நோக்கி நகரத் தொடங்கும். குறைந்த காற்றழுத்தம் வலுவடையும்போது கடலில் அதிக சூறாவளி காற்றையும், கடல் சீற்றத்தையும் உண்டாக்கும்.
மேலும் மிக அதிக மழையையும் கொண்டு வரும். நாளை முழுவதும் அந்த காற்றழுத்தம் வலுவாகிக் கொண்டே தமிழக கடலோரம் நோக்கி வரும். காற்றழுத்தம் மேலும் வலுவடையும் பட்சத்தில் அது புயலாக மாறும். அந்த புயலுக்கு புதிய பெயர் சூட்டப்பட உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும். டெல்டா மற்றும் வட பகுதியில் உள்ள 10 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் காற்றும், மழையும் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு அந்த 10 மாவட்டங்களுக்கும் ரெட்அலர்ட் விடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முழுவதும் பலத்த மழை கொடுக்கும் அந்த குறைந்த காற்றழுத்தம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை வடதமிழக கடலோரத்தை நெருங்கும்.
இதன் காரணமாக வட கடலோர பகுதிகளில் மிக பலத்த மழை முதல் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வரும் 12-ந்தேதியும் தமிழகத்தில் கணிசமான அளவுக்கு மழை இருக்கும். இதன் காரணமாக 10, 11, 12 ஆகிய 3 நாட்களும் அதிக கவனத்துடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கடலில் சூறாவளி காற்றும், கொந்தளிப்பும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.