நடுக்கடலுக்கு சென்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கடலோர காவல்படை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ள நிலையில், மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு, நடுக்கடலுக்கு சென்று கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால், தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கடலோர காவல் படை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சென்னை அருகே படகு மூலம் நடுக்கடலுக்குச் சென்ற கடலோர காவல்படையினர், உடனடியாக கரை திரும்புமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி, காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து எச்சரித்தனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள், அருகில் இருக்கும் துறைமுகங்களுக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என டிவிட்டர் பக்கத்திலும் கடலோர காவல் படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.