தமிழக சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வரும் நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள 27 சுங்க சாவடிகளில் நாளை முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் மத்திய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, 49 இடங்களில் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் 8-10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.