நாளை டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளதா ? விளக்கம் அளித்த மேலாண் இயக்குநர்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல்வர் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியது.
இதனையடுத்து, காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச்செயலகத்தில் 12 எம்.எல்.ஏ.க்களுடனும், மருத்துவக் குழுவுடனும் தமிழகத்தில் ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவுவதால் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வரும் மே 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு காய்கறி, மளிகை கடைகள் கூட இயங்காது. மாறாக, மக்களுக்கு தோட்டக்கலை துறை மூலமாக வாகனங்கள் மூலம் வீடுகளிலேயே காய்கறிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒரு வாரம் கடைகள் இயங்காது என்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதே போல, பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தனியார் மற்றும் அரசு பேருந்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளும் இயங்குமா என்ற கேள்வி எழுந்ததையடுத்து, இது குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விளக்கம் அளிக்கையில், டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது. அப்படி மதுபானக் கடைகள் திறந்தால் மது வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் கூடும். இதனால், மதுபானக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றார்.