ரூ.5 லட்சம் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டு கொலை!
ஓசூர் அருகே 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே பெல்லுர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். லோகேஷ் மற்றும் எது பூசன் ரெட்டி என்பவருடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டெட் தொழில் செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களாக லோகேஷிடம் எது பூசன் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே ரியல் எஸ்டேட் தொழிலை இரண்டு பேரும் தனித்தனியாக செய்து வந்தனர்.
லோகேஷிடம் அடிக்கடி எதுபூசன் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால், லோகேஷ் பணம் மறுத்ததால் ஆத்திரமடைந்த எது பூசன், கூட்டாளிகள் மூன்று பேருடன் சேர்ந்து லோகேஷ் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளனர்.
அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த லோகேஷை கதவைத் தட்டி வெளியே அழைத்துள்ளனர். வெளியே வந்த லோகேஷ்ஷை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு அங்கிருந்து எதுபூசனும், அவரது கூட்டாளிகளும் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து, சத்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த லோகேஷை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகோஷை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் லோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எது பூசன், கஜா (எ) கஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை, ஆள்கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.