தமிழகத்தில் ஒரு நாளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது: வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் இன்னும் ஒரு நாளுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு மட்டுமே உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த சூழலில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்கள் பெரும்பாலானோருக்கு மூச்சு திணறல் இருப்பதால் தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனையடுத்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இது குறித்து வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அப்போது தமிழகத்தில் நாளைவரை (07.05.21) மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும், சனிக்கிழமை மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் எனவும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை நாளைக்குள் உறுதி செய்யவேண்டும் என்றும் , விரைந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஆலோசிக்கவேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் மத்திய அரசிடம் கூறியுள்ளது. அதற்கு, ஆக்சிஜன் ஒதுக்குவதில் எந்தவித குறைபாடும் இல்லை என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.