கொரோனா பரவல் அதிகரிப்பு - விருத்தாச்சலத்தில் பிரதான சாலைகளுக்கு சீல்
விருத்தாச்சலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதான சாலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகர ஊரக பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விருத்தாசலத்தில் பங்களா தெரு வழியாக செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள், தனியார் திருமண மண்டபங்கள், ஏராளமான கடைகள் உள்ளன.
இங்கு சமீபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அந்தப் பகுதிகளில் வெளிநபர்கள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில், வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட குழுவினர் ஆலடி சாலை முகப்பு பகுதிகளை இரும்புத் தகடுகள் மூலம் சீல் வைத்தனர்.
அப்பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும், நாச்சியார்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று அதிகரித்து, இரண்டு பேர் இறந்தனர். இதனையடுத்து, நாச்சியார்பேட்டை பகுதிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.