இலங்கைக்கு நிவாரண பொருட்களடங்கிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்த தமிழக முதலமைச்சர்
பொருளாதார நெருக்கடியால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது இலங்கை.அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி,ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர், ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது.
இந்த கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார். இந்தக் கப்பலில் ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து, தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கின்றன. மீண்டும் 22-ந்தேதி 2-வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.