ஜூனில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் செல்ல உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பின்னணி திட்டம் என்ன?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகம் கொண்டு வருவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி துபாய் சென்றார்.
துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழக அரங்கிணை திறந்து வைத்த அவர் தொடர்ந்து 2 நாட்களாக துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனையடுத்து, அபுதாபி சென்றார்.
துபாய், அபுதாபி பயணம் மூலம் மொத்தம் தமிழகத்திற்கு 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடந்த நம்மில் ஒருவர் நம்ம முதல்வர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு 2வது முறையாக வெளிநாடு செல்ல இருக்கிறார்.
ஜூன் மாத இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் சென்று தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தோடு துபாய் சென்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, லண்டன் மற்றும் அமெரிக்காவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.