இலங்கை மக்களுக்கு உதவி செய்யுங்கள்... - வேண்டுகோள் விடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.
இந்நிலையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது.
எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.