கொரோனா நிவாரண நிதிக்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா பிடிவில் சிக்கித் தவித்து வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.
கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
கொரோனா பரவிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்டு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.