புருடா விடும் அவரே ஆளுநராக இருக்கட்டும்; நாடாளுமன்ற தேர்தல்வரை மாற்றி விடாதீர்கள் - முதல்வர் ஸ்டாலின்!
அவரே தொடர்ந்து தமிழக ஆளுநராக இருக்கட்டும், அது நமது பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டே இருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
சென்னை எழும்பூரில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
பின்னர் அவர் மேடையில் உரையாற்றியதாவது "போகும் போக்கை பார்த்தால் தமிழகத்தில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற நிலை வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இதை நான் வேதனையுடன் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் தான் சொல்கிறேன். இதுதான் திராவிட மாடல்" என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
ஆளுநரை மாற்றி விடாதீர்கள்
மேலும் பேசிய அவர் "என்னைப் பொறுத்தவரைக்கும், அந்த புருடா விடும், திராவிடம் என்றால் என்ன? என்று கேட்கும் அவரே தொடர்ந்து தமிழக ஆளுநராக இருக்கட்டும்.
அது நமது இன்னொரு பிரச்சாரத்திற்கு வலுவாக சேர்ந்து கொண்டே இருக்கிறது. நான் ஒன்றிய அரசையும், ஒன்றிய அரசில் பொறுப்பில் இருக்கும் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், தயவு செய்து இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றி விடாதீர்கள்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வரைக்குமாவது அவரே இருக்கட்டும்" என்று மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.