வெள்ள பாதிப்பு - இன்று ஆளுநரை நேரில் சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெய்து வரும் மழை, வெள்ள மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க இருக்கிறார்.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ,தென்காசி மாவட்டங்களில் இடியுடன் மிக கனமழை பெய்து வருகிறது.
சென்னையில், நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழையானது நேற்று முழுவதும் விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், போரூர் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெய்து வரும் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு பேச உள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.