சொல்லாததையும் செய்து காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அருகே அடைக்கலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “கடந்த 2011 தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைத்து, ஜெயலலிதா முதல்வரானார், 2016ல் கூட்டணியில்லாமல் மக்களால் நான் மக்களுக்காக நான் என்று கூறி அதிமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று 32 வருடங்களுக்கு பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டு, ஆட்சியமைத்தது.
பின்னர் 2017 பிப்ரவரி 16ல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அவரும் ஜெயலலிதா வழியில் மக்களுக்காக சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவிதம் நிறைவேற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது சொல்லாதததையும் செய்து வருகிறார். குறிப்பாக குடிமராமத்து பணிகளால், நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார். ஏழை மருத்துவ மாணவர்களின் நலன் கருதி மருத்துவ படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து சாதனை படைத்துள்ளார்.
2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி சொன்னதை மட்டுமல்லாது சொல்லாததையும் செய்து, கொரானா காலத்தில் திறமையான முறையில் செயல்பட்டு கொரானாவை கட்டுக்குள் கொண்டு வந்து இந்தியாவில் முதன்மை மாநில அந்தஸ்தை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார். நமது தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். குறிப்பாக உடன்குடி அனல் மின்நிலைய பணிகள் துரிதப்படுத்துப்பட்டு வருகிறது. மீனவ மக்களின் நலன் கருதி தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரானாவால் பாதிப்படைந்த மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பரிசு தொகுப்புடன், ரூபாய் 2 ஆயிரத்த 500 வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் அதிமுக கட்சி சார்பில் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் கிறிஸ்தவமக்களின் கோரிக்கையை ஏற்று ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா வழங்கி வந்த உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தை, தற்போது ரூ.37 ஆயிரத்து 500ஆக உயர்த்தி வழங்கியுள்ளார்.
எனவே மீண்டும் தமிழகத்தில் அதிமுக 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். திரையரங்குகள் 100 சதவீதம் இருக்கைகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை பொருத்த மட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம் பெறும். முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார் தான் என்று ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்” என்று கூறினார்.