கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி. விருது - நடிகை பார்வதி கடும் எதிர்ப்பு!
மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக விருது வழங்கப்படுகிறது. இந்த விருது கேரளாவில் வழங்கப்படும். ஆனால், முதன்முறையாக இந்த விருது கேரளாவை சேராத கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவிஞர் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்பட்டதற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி, கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து நடிகை பார்வதி தனது டுவிட்டர் பதிவில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர். ஒரு கவிஞர் மற்றும் பாடலாசிரியராக அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. அவரது சிறந்த பணியால் எங்களது இதயங்களும் மனங்களும் பயனடைந்துள்ளது. ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயியும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்பட்டதை எதிர்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
