எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை பார்க்கிறேன் – நடிகர் கவுண்டமணி வேதனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திற்கு மேல் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தினசரி உயிரிழப்புகள் 400ஐ கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. கொரோனா முதல் அலையில் அதிகளவில் வயதானவர்களே இறந்துள்ளனர்.
ஆனால், இரண்டாம் அலையில் இளம் வயதினரும், இணை நோய் இல்லாதவர்களும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
தடுப்பூசி ஒன்றேதான் கொரோனாவிற்கு தீர்வு என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திரைத்துறை பிரபலங்களும் தங்களால் இயன்ற அளவுக்கு மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில், கொரோனா வைரஸ் சாதாரண நோய் இல்லை. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் பார்க்கிறேன் என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தயவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அவசரமாக இருந்தால் மட்டுமே வெளியே வாருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.