பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

stalin booster dose vaccine
By Nandhini Jan 10, 2022 04:50 AM GMT
Report

கொரோனாவை தடுக்கும் வகையில் முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள்,60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்திருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை தடுக்க முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் முதற்கட்டமாக இன்று முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்ப்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக, தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்ட பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள இமேஜ் கலையரங்கில் இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன்படி, 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் (2021 ஏப்ரல் 14 க்கு முன் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்) நிறைவடைந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்களுக்கு, முதல் மற்றும் 2ம் தவணையின்போது எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக 3 வது முறை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் 36 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான நிலையில், முதற்கட்டமாக, இன்று 4 லட்சம் பேருக்கு 3 வது டோஸ் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.