முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் கைது - போலீசார் அதிரடி
பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதனையடுத்து, முன்ஜாமீன் கோரிய ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், அவரை கைது செய்யும் முயற்சியில் தனிப்படைகள் அமைத்து திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருவதாக விருதுநகர் எஸ்.பி.மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் (38), ரமணன் (34) மற்றும் கார் ஓட்டுநர் ராஜ் குமார் (47) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.