முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் தீவிரம் - நடந்தது என்ன?
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ம் தேதி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நேற்று (17.12.21) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவர்கள் நால்வரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், சாத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்படும் நிலையில், அதன் எண்ணிக்கை தற்போது 6ஆக உயர்ந்துள்ளதாக விருதுநகர் எஸ்.பி மனோகரன் தகவல் தெரிவித்துள்ளார்.