அதிமுகவை பகைவராக நினைக்கவில்லை - கண் கலங்கிய அமைச்சர் எ.வ.வேலு..!
அதிமுகவை பகைவராக நாங்கள் நினைக்கவில்லை என சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.பிற்பகல் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.
அப்போது அத்துறையின் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.அதில் அதிமுகவை பகைவராக நாங்கள் நினைக்கவில்லை எனக் கூறினார்.
ரூ.39 கோடியில் கலைஞர் நினைவிடப் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அப்போது பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே அவர் அருகில் அமர்ந்திருந்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை உனக்கு எத்தனை முறை தண்ணீர் எடுத்து கொடுத்திருக்கிறேன். என்று கூறவே அவையில் சிறிப்பலை எழுந்தது.
இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறித்து பேசிய அவர் கண் கலங்கினார். மேலும் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள்,நீதியரசர்கள்,முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் பாராட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து நாளிதழ்கள் பாராட்டி எழுதியுள்ளதாக தெரிவித்தார். தமிழ் நாளிதழ்கள் மட்டுமின்றி,மற்ற மாநில நாளிதழ்களும் பாராட்டியுள்ளதாக கூறினார்.
அப்போது மலையாளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பாராட்டி வெளியான கட்டுரை குறித்து மலையாளத்தில் பேசி அனைவரையும் அசத்தினார்.