கோட்டையில் அல்ல, கலைவாணர் அரங்கத்தில்தான் சட்டசபை கூட்டத்தொடர் -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamilnadu Assembly Kalaivanar Arangam
By Thahir Jan 01, 2022 02:47 PM GMT
Report

அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த மாதம் வரை கொரோனா பரவல் குறைந்திருந்த காரணத்தால் வருகிற 5-ந்தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கவர்னர் உரையுடன் தொடங்கக்கூடிய இந்த கூட்டத்தொடரில் புதிய கவர்னரான ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதையொட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை வளாகம் புதுப்பிக்கப்பட்டு வந்தது.

கலைவாணர் அரங்கில் உள்ள தற்காலிக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது போல் கோட்டையில் உள்ள சட்டசபை அரங்கிலும் கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டன.

இதற்கிடையே கொரோனா பரவல் இப்போது அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

குறிப்பாக, அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற இருந்த சட்டசபை கூட்டத் தொடரை மீண்டும் கலைவாணர் அரங்கத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபையை கூட்ட ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.