விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு விவகாரம் - சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு

By Nandhini May 06, 2022 06:52 AM GMT
Report

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவில் அவருக்கு உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை, கண் புருவம், தாடை பகுதிகளில் காயம் இருந்ததாகவும், வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் மீதும் கொலை வழக்கு பாய்கிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உயர் அதிகாரிகளிடம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

கைதி விக்னேஷ் மரணத்தில் பழங்குடியின ஆணையம் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.   

விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்பு விவகாரம் - சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பு | Tamilnadu Assembly Aiadmk Walkout