தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் - தமிழகத்திலிருந்து 5 கட்சிகள் பங்கேற்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் அதனை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தம் காட்டி வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் பாஜக இறங்கியுள்ளது. பாஜகவை எதிர்கொண்டு வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக எதிர் கட்சிகள் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கூட்டணி கட்சிகள் கூட்டம்
இந்நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்கிறது. தமிழகத்தில் இருந்து அதிமுக,பாமக,தமிழ் மாநில காங்கிரஸ்,ஐஜேகே, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன்,ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை