தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் - 2ஆம் தவணைக்கு முன்னுரிமை
தமிழகத்தில் ஐந்தாம் கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கியது. மொத்தம் 30 ஆயிரம் முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ள நிலையில், 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களுக்கு இன்று முன்னுரிமை வழங்கப்படும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
2ஆம் தவணை செலுத்தாத சுமார் 20 லட்சம் பேருக்கு இன்றைய முகாம்களில் தடுப்பூசி போட இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமைகளில் இதுவரை 4 முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 30 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.