2-வது விமான நிலையம் - விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு
தமிழகத்தில் 2-வது விமான நிலையம் அமைப்பதில் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என்று தமிழக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மீனம்பாக்கம் விமான நிலையம்
சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
சென்னையில் 2-வது விமான நிலையம்
இதனையடுத்து, சென்னையை அடுத்த பரந்தூர் 2-வது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு நிலம் வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது -
புதிய விமான நிலையம் தொடர்பாக 13 கிராம மக்களிடம் கருத்து கேட்டுள்ளோம். விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமாக இருக்கிறது. சென்னையில் 2வது விமான நிலையம் கட்டாயம் தேவைப்படுகிறது.
சரக்குகளை கையாளக்கூடிய வகையில் தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். விமான நிலையத்துக்கான இடத்திற்கு மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு பணம் வழங்குவதோடு, வீடு கட்டவும் பணம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.