தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க.... - ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவுக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. ஆனால், அதை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது -
முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2,109 கன அடி தண்ணீர் வரத்து இருக்கிறது. அதே நேரத்தில், வினாடிக்கு 1,750 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பருவ மழை தீவிரமடைய உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 142 அடியை எட்டும் நிலை இருக்கிறது.
திடீரென அணையிலிருந்து அதிக தண்ணீர் திறந்தால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. அதனால் தற்போதே அணையிலிருந்து கால்வாய் வழியாக வைகை அணைக்கு அதிகளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அணை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் தகவல் தெரிவித்தால், அணையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வசதியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.