ஆறாத ரணம்; கோரத்தாண்டவமாடிய சுனாமி - 19வது ஆண்டு நினைவு தின அனுசரிப்பு!
இன்று சுனாமி தாக்கிய 19 ஆவது நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
சுனாமி
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி தாக்கியது. பல லட்சம் மக்களின் உயிர்களை காவு வாங்கியது.
தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்கள் மோசமான பாதிப்படைந்தது. வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர்.
நினைவு தினம்
இந்த சுனாமி தாக்குதலில் சென்னை முதல் குமரி வரை கிழக்கு கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6 ஆயிரத்து 65 பேரும், கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் பலியானார்கள்.
தொடர்ந்து, ஆழிப்பேரலை தாக்கிய நாளான டிசம்பர் 26ஆம் தேதி கடலோர கிராமங்களில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை முதல் குமரி வரை கடலோரம் வசிக்கும் கிராம மக்கள் அமைதி பேரணியாக சென்று கடலில் பால் ஊற்றி, பூக்களை தூவி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.