தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்ல 450 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ஆந்திர இளைஞர்!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆந்திர மாநிலத்திலிருந் ஒரு இளைஞர் 450 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தின் போது ஸ்டாலின் புகைப்படம் கொண்ட பதாகையை ஏந்தி வருகிறார். அந்தப் பதாகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. அது மேன்மேலும் தொடர வேண்டுகிறேன் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில், ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேகர் (30). இந்த இளைஞர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ரமாதேவி என்கிற மனைவியும் ஒரு மகளும் , ஒரு மகனும் இருக்கிறார்கள். இவர் பவன் கல்யாண் கட்சியில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வரின் செயல்பாடுகளை அறிந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார். அந்த இளைஞர் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்திலிருந்து சென்னை நோக்கி நடை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த 10ம் தேதி அன்று காலை 6 மணியளவில் ஹைதராபாத்தில் நடைபயணத்தை தொடங்கிய அந்த இளைஞர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான எளாவூர் ஏழுகிணறு பகுதிக்கு வந்துள்ளார்.
இது பற்றி அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி. ஜே. கோவிந்தராஜன், சேகரை வரவேற்று அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் சிறிது நேரம் அந்த இளைஞரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி, அவருக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தார். அதன் பிறகு, சென்னை நோக்கி அவரை வழி அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் தேங்கிய மழை நீரில் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். அவரின் ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டு பெருமைப்படுகிறேன். இந்தியாவின் சிறந்த முதல்வராக அவரைப் பார்க்கிறேன். அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என விரும்பினேன். அதுவும் நடை பயணமாக சென்று அவருடைய அவரை சந்திக்க முடிவு செய்தேன். ஆந்திர மக்களும் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் உருவம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.