இன்னுயிர் காப்போம் திட்டம் - 48 மணி நேரத்திற்கு உயர் சிகிச்சை இலவசம் - தமிழக அரசு
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்தும், சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்கும் விபத்துகளை குறைப்பதற்கும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்றிருப்பது குறைக்கப்பட வேண்டும் என்றும், சாலைப் பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையிலும், சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்கும், விபத்துக்களை தவிர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அறிவுறுத்தினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
சாலை பொறியியல், வாகன போக்குவரத்து, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து கருத்துக்களின் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பல்துறை நிபுணர்கள் உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலை பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் , நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும்.
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசு மேற்கொள்ளும் வகையில் நம்மை காக்கும் 48 அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.
சாலை ஓரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கென கண்டறியப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும் உறுதியளிப்பு அடிப்படையில், செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீராகும் சாலைகளும் நம்மை காக்கும் 48 மணி நேரமும், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டமும் , உதவி செய்வதுமே தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.