உங்களுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள் - முதல்வருக்கு சவால் விடுத்த அண்ணாமலை
ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்கு போடுவது சரி கிடையாது என்று சொன்ன தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது -
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் பிரதமரின் உரை ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் தமிழக அதிகாரிகள் மீது வழக்குப் போடுவது சரி கிடையாது.
தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒரு கருத்தையும், முதல்வர் ஆன பிறகு ஒரு செயலையும் செய்து வருகிறார் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நிவர் புயலால் கடும் சேதம் ஏற்பட்ட போது ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் எதிரொலியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.