‘இனி.. மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்கள் தான்...’ - தமிழக அரசு அறிவிப்பு

tamilnadu
By Nandhini Nov 18, 2021 05:26 AM GMT
Report

கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்காக மத்திய, மாநில அரசின் காவல் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்காவல்படை பணியாளர்கள், சிறைச் சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி வருவாய் துறை ஊழியர்கள் ஆகியோரை முன் களப்பணியாளர்கள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும், மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.

மத்திய அரசின் ஆணைப்படி மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன் களப்பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்போது தமிழ்நாடு அரசு மயான பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்கும் நேர்வுகளில் அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வாரியாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

‘இனி.. மயான பணியாளர்களும் முன்களப் பணியாளர்கள் தான்...’ - தமிழக அரசு அறிவிப்பு | Tamilnadu