சென்னையில் 200 வார்டுகளில் இலவச மருத்துவ முகாம் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

tamilnadu
By Nandhini Nov 12, 2021 05:45 AM GMT
Report

தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், வீடுகளில் வெள்ள மழை நீர் தேங்கியுள்ளது.

சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடுகள் காரணமாக, தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இன்று சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளும், இந்த முகாம்களில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. டெங்கு, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.