ஹஜ் புனித யாத்திரை : பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

tamilnadu
By Nandhini Nov 11, 2021 09:50 AM GMT
Report

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது -

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும்.

‘2022 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ள ஏதுவாக, உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும். சமீபத்தில் ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் 1443 (H) 2022 அறிவிக்கையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை.

2019ம் ஆண்டில், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக தற்போது கேரளாவில் உள்ள கொச்சி விமானநிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும். மேலும் இது குறித்து தனக்கு ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

ஹஜ் புனித யாத்திரை : பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | Tamilnadu