கழிவுகளை மனிதர்கள் அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

tamilnadu
By Nandhini Nov 11, 2021 08:37 AM GMT
Report

கழிவு நீர்த் தொட்டிகள், பாதாள சாக்கடைகளில் இறங்கி வேலை செய்யும்போது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனிதர்களை கொண்டு கழிவுகளை சுத்தம் செய்வதை தடுக்கும் விதமாக மனுதாரர் தரப்பில் பல ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அந்த ஆலோசனைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை' என்று கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் இதுநாள் வரை ஈடுபட்டவர்களுக்கு, மாற்று வேலை உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும்போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும், மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அபராதம் விதிப்பதற்கான வழிவகைகளையும் அரசு உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். 

கழிவுகளை மனிதர்கள் அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Tamilnadu