வடகிழக்கு பருவமழை : தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் - மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்
வடகிழக்கு பருவமழையால், தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அத்துடன் இன்று 12 மணி நேரத்தில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால், நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது -
"சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரிடர் சூழல் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். சாலைகளில் 3 அடிவரை வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
இதனால் நீர் நிலையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் உதவி கிடைத்தால் தமிழக மக்கள் நன்றியுடன் இருப்பார்கள். சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதி தேவை. எனவே நிவாரணம் மற்றும் மீட்பு, மேல் சீரமைப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்கும்படி நிதி அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) November 9, 2021