அடுத்த 48 மணி நேரம் அடித்து வெளுத்து வாங்கப்போகும் கனமழை - தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது.
சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழை பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இந்தச் சூழ்நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு -
"மகாராஷ்டிரா, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நவம்பர் 11ஆம் தேதி வரை கன மழை பெய்யும். அதேபோல தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில நாட்களில் மிக கனமழை தொடரும். பெரும்பாலும் நவம்பர் 11ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த இரு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர ஆந்திரா, யானம், ஏனாம் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுப்புறங்களில் 9ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.