ஜனவரி 12-ம் நாள் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடப்படும் - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஜனவரி 12-ம் நாள் ஆண்டுதோறும் இனி புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். புலம்பெயர் தமிழர் நல வாரியம் அரசு மற்றும் புலம் பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு -
5 கோடி ரூபாய் புலம்பெயர் தமிழர் நல நிதி என மாநில அரசின் முன் பணத்தை கொண்டு இது உருவாக்கப்படும். மூலதனச் செலவினம் ஆக ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் நல திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாயை ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.
புலம்பெயர் தமிழர் குறித்த தரவுதளம் ஏற்படுத்தப்படும், வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
வெளிநாட்டிற்கு செல்லும் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை வழங்கப்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்காக தமிழர்கள் புலம் பெயரும் போது பயண புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது.
இது சென்னை மட்டுமின்றி ராமநாதபுரம் ,புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர் ,பெரம்பலூர் ,சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடத்தப்படும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைத்தளம் கைபேசி செயலி அமைத்து தரப்படும்.
தமிழர்களுக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் என தனியாக சட்ட உதவி மையம் அமைக்கப்படும் அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நல சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் .
அதன் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இவற்றிற்காக நான்கு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாளாக கொண்டாடப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.