சீதாராம் யெச்சூரியின் தாயார் காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் தாயார் கல்பகம் யெச்சூரி (89) உடல் நலக்குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார்.
அரியானா மாநிலம் குறுகிராமில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் நேற்று இரவு காலமானார்.
அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சீதாராம் யெச்சூரியின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தோழர் சீதாராம் யெச்சூரியின் தாயார் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் தாயார் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தாயை இழந்து வாடும் அவருக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.