மாணவர்கள் தற்கொலை முடிவுகளை இனி எடுக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

tamilnadu
By Nandhini Sep 12, 2021 07:39 AM GMT
Report

மாணவர்கள் தற்கொலை முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது மாணவன், கடந்த 2019 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த நிலையில் 2 முறை நீட் தேர்வை எழுதி இருக்கிறார். 2 முறையும் அவர் தோல்வி அடைந்துள்ளார்.

இந்த நிலையில், 3வது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார். இருப்பினும், இந்த முறையும் தேர்வில் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது. குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்துள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில், “நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்கு சரியான பதிலைக் கூறி, மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் 19 வயது தனுஷின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். மாணவச்செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்க கூடாது என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.