கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் – அமைச்சர் மா.சு தகவல்!
கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதன் காரணமாக அங்கிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவன் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழக எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது -
ஜிகா வைரஸின் போதே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டோம். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது அங்கு நிபா வைரஸ் பரவுவதாக செய்தி வந்துக் கொண்டிருக்கின்றன. உடனடியாக கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள 9 மாவட்டங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
காய்ச்சல் முகாம்களை அதிகரிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக வைரஸ்கள் பரவும் போது அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்க சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில் உள்ளார்கள். தமிழகம் பாதுகாப்பான நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.