கதறிய ஓபிஎஸ் ; கட்டியணைத்து ஆறுதல் கூறிய அமைச்சர் பி.டி.ஆர்
வயிற்று உபாதை காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ்சின் மனைவி விஜயலட்சுமி (63) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை 6.45 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இந்த மாரடைப்பு காரணமாக அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்த போதே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரிய குளத்திற்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹார தெருவில் உள்ள ஓபிஎஸ்சின் இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, கண் கலங்கி நின்றுக் கொண்டிருந்த ஓபிஎஸ்ஸை கட்டி அரவணைத்து அமைச்சர் பிடிஆர் ஆறுதல் கூறினார். பின்னர், ஓபிஎஸ்சின் மகனுக்கும் அவர் ஆறுதல் கூறினார்.