ஒபிஎஸ் மனைவி மரணம் - அன்பு சகோதரிக்கு இப்படி ஒரு துயரம்... என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - எடப்பாடி கண்ணீர்
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த 22ம் தேதி ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்க்கைக்கு பக்கத் துணையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவரின் மறைவு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது -
“அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவர்கள் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத துயரமும் வேதனையும் அடைகிறேன். அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த பேரிழப்பை எப்படித் தாங்குவார் என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.
எல்லோருக்கும் உதவும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரிக்கு இப்படி ஒரு துயரம் இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை கொடு என்று பிரார்த்திக்கிறேன். மறைந்த அண்ணியார் விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவருடைய இல்லத்தில் நான் சந்தித்த போதெல்லாம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் உயர்ந்த உள்ளத்துடனும் என்னை உபசரித்தது நினைத்து, அந்த நல்ல இதயம் நம்மை விட்டு பிரிந்தது என்று வேதனைப் படுகிறேன்.
அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் – திருமதி விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு பிள்ளைகளான தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், கழக நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் உள்ளிட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் உற்றார், உறவினர்களுக்கும் இந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அண்ணியார் திருமதி விஜயலட்சுமி பன்னீர்செல்வம் அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ”.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி. pic.twitter.com/ygThCEkxdC
— AIADMK (@AIADMKOfficial) September 1, 2021