ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
கடந்த 22ம் தேதி ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்க்கைக்கு பக்கத் துணையாக இருந்தவர் விஜயலட்சுமி. இவரின் மறைவு அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமியின் உடலுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
இன்னும் சில மணி நேரத்தில் விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓபிஎஸ்சின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
