கதறி அழுத ஓபிஎஸ் - கையை பிடித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

tamilnadu
By Nandhini Sep 01, 2021 05:15 AM GMT
Report

ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி காலமானார்.

அவருக்கு வயது 63. கடந்த 22ம் தேதி முதல் விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இன்று காலமானார்.

விஜயலட்சுமி உடல் இன்னும் சில மணிநேரங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தி.நகரில் உள்ள இல்லத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.

இந்நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.யின் கையைப் பிடித்து ஆறுதல் கூறும்போது, ஓ.பி.எஸ். கண்ணீர் கலங்கி கதறி அழுதார். முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். மகன்களுக்கும் தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தமிழக முதலமைச்சராகவும், 2017 முதல் 2021 வரை தமிழக துணை முதலமைச்சாரகவும் பொறுப்பில் இருந்தார். விஜயலட்சுமி ஓபிஎஸ் அரசியல் ரீதியாக உயரத்தை அடைய உறுதுணையாக இருந்தவர். இதனால் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு அரசியல் பாகுபாடின்றி பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

கதறி அழுத ஓபிஎஸ் - கையை பிடித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின் | Tamilnadu