ஓ.பி.எஸ். மனைவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63.
கடந்த 22ம் தேதி முதல் விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். விஜயலட்சுமி உடல் இன்னும் சில மணிநேரங்களில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, திநகரில் உள்ள இல்லத்தில் சிறிது நேரம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் சொந்த ஊரான தேனி பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
இந்நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அத்துடன் முதல்வர் ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், மகன்களுக்கும் தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவிக்கு எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக எம்எல்ஏக்கள் நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை புரிந்து அஞ்சலி செலுத்தினார்கள்.