மதுரையில் பாலம் இடிந்து விபத்து : தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு!
மதுரையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் சிக்கினர். அதில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து தீயணைப்புத்துறை படையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் நேரில் ஆய்வு செய்தார். அதேபோல் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, தல்லாகுளம் உதவி ஆணையர் சுரக்குமார் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டார்கள். கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் மக்களிடையே ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த மேம்பால விபத்துக்கு காரணம் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘உரிய பயிற்சி அளிக்கப்படாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பணியில் பயன்படுத்திய இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. பாலம் கட்டும் ஒப்பந்ததாரரிடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மூலம் விசாரணை நடத்தப்படும். மேம்பால பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வார்” என்றார்.