“பாஜக அலுவலகம் முற்றுகை” : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் அறிவிப்பு!
பாஜகவில் மூத்த நிர்வாகிகள் பலர் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, இது குறித்த வீடியோ வெளியாகி, சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த பத்திரிகையாளர் மதன் பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும், இந்த வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன்தான் வெளியிட்டேன் என்று ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் மதன். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியதாவது -
தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக தனது தலைமையில் இன்று பிற்பகல் வள்ளுவர் கோட்டத்திலிருந்து புறப்பட்டு தமிழக பாஜக அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைக்கு எதிராக, பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றும் மத்திய மோடி அரசை கண்டித்து, தமிழக பாஜக அலுவலகங்கள் அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடுகின்ற போராட்டம் நடைபெற உள்ளது.
பொள்ளாச்சி போன்ற கொடுமையான சம்பவங்களாக மாறாமல் இருக்க பெண்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக கமலாலயம் முற்றுகை போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
பாஜகவின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராகவனை கைது செய்ய வேண்டும். தனது கட்சி பெண் நிர்வாகிகள் மானத்தை பாதுகாக்க தவறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை தமிழ்நாடு மக்களின் போராட்டங்கள் ஓயாது.
இவ்வாறு அவர் கூறினார்.