அண்ணாமலை உடனே பதவியை ராஜினமா செய்ய வேண்டும் : எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தல்

tamilnadu
By Nandhini Aug 27, 2021 04:52 AM GMT
Report

தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை உடனே பதவியை ராஜினமா செய்யவேண்டும் என்று எம்.பி.ஜோதிமணி வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

“ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜகவின் தற்போதைய மாநில தலைவர் தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை. குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது? சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்கிறார்கள்,அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும்,மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்.

இன்னும் பல கண்ணியக்குறைவான செய்திகள் தமக்குத் தெரியும் என்கிறார். ஒன்றிய இணைஅமைச்சர் திரு. முருகன் தொடர்பாகவும் ஒரு பாலியல் வீடியோ இருப்பதாக மதன் சொல்லும் போது திரு. அண்ணாமலை அதை மறுக்கவில்லை. ஆக அதுவும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஒரு கட்டத்தில் மிக மோசமாகப் பேரம் பேசுகிறார்.

இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கையில்,காலில் விழுந்தாவது பாஜக தலைவர்களை காப்பாற்ற இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்பேன் என்கிறார். அப்படித்தானே?அவர்களைப் பற்றி அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் கிடையாது. இதைக் கேட்கும்போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது. இவர் தான் தேசம் காப்பவர்! தமிழகத்துப் பெண்கள் தேசம் இல்லையா? எங்களுக்கு கண்ணியமும்,கௌரவமும் இல்லையா?அப்படியென்றால் சாதாரண பெண்களுக்கு இந்த பாஜக தலைவர்களிடமிருந்து என்ன பாதுகாப்பு இருக்கமுடியும்? இப்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அவலம் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரம் அல்ல. பெண்களின் கௌரவம், கண்ணியம், பாதுகாப்போடு தொடர்புடையது.

எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் நமது சகோதரிகளே. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது மற்றும் தமிழக அரசின் கடமை. ஆனால் பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை சொந்த கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்ய முடியாதவர், சாதாரண பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர், பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் கடந்து போகிறவர், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர் இவர்தான் தேசம்,தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பவர். ஆகவே அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். தமிழகத்துப் பெண்களை அவமதித்ததற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

அண்ணாமலை உடனே பதவியை ராஜினமா செய்ய வேண்டும் : எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தல் | Tamilnadu