நடிகர் விஜய் சேதுபதியின் கோரிக்கையை நிராகரித்துவிடுவாரா முதலமைச்சர்?
‘காத்துவாக்குல காதல்’ படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார். இதனையடுத்து, நேற்று இரவு புதுச்சேரி முதல்வரை அவரது வீட்டில் வைத்து நடிகர் விஜய் சேதுபதி சந்தித்தார்.
அப்போது புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் முன்பு வசூலிக்கப்பட்டதாகவும், தற்போது ரூ.28 ஆயிரம் வசூல் செய்யப்படுவதாகவும் ரங்கசாமியிடம் விஜய் சேதுபதி கூறினார்.
புதுச்சேரியில் நடக்கும் படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி புதுச்சேரி முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அதற்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, விஜய் சேதுபதியுடன் வந்தவர்களும் கோரிக்கை சம்பந்தமாகப் பேசி அழுத்தம் கொடுத்தினர். கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிப்பதாக முதல்வர் கூறி வழியனுப்பி வைத்தார்.
முதல்வர் ஏன் அமைதியாக இருந்தால் என்பது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், “புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது பல்வேறு தரப்பினரும் ஆதரவுக்கரம் நீட்டினர். கொரோனா நிவாரணத் தொகையை அரசிடம் வழங்கினர். ஓய்வூதியம் வாங்குவோர் தொடங்கி சிறு குழந்தைகள் வரை பலரும் தங்களால் இயன்ற தொகையைச் செலுத்தினர்.
அதேபோல புதுச்சேரியிலுள்ள தனியார் தொழில் நிறுவனங்கள் தொகை மட்டுமல்லாமல் உணவு, மருத்துவச் சாதனங்களைக் கொடையாக அளித்தனர். ஆனால் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
நடிகர் விஜய் மட்டுமே ரூ.5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். இதுவும் ஒரு காரணம். அதேபோல கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு உழன்று வருவதால் வரிகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதிக வருவாய் ஈட்டும் திரைத்துறையினர் நாள் கட்டணத்தை குறைக்க சொல்வதை ஏற்க முடியாது. அதனால்தான் முதலமைச்சர் எந்த உறுதியும் கொடுக்கவில்லை” என்ற தகவல் வெளிவந்துள்ளதாக கூறினர்.