மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடி குறைந்ததால் தலைக்காட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை!

tamilnadu
By Nandhini Aug 17, 2021 10:13 AM GMT
Report

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழாக இறங்கியதால் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலையின் தலை வெளியே தெரிந்தது.

மேட்டூர் அணை கட்டப்படும்போது, நீர்த்தேக்க பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அங்கிருந்து வெளியேறி கிராம மக்கள் வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டார்கள்.

கிராம மக்கள் வெளியேறிய போது தங்களது வழிபாட்டுத் தலங்கள் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழே குறையும் போது, பண்ணவாடி பரிசல் துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரமும், நீர்மட்டம் 70 அடிக்குக் கீழே சரியும் போது, அதே பகுதியில் உள்ள பழமையான ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி சிலையும் வெளியே தெரியும்.

மேலும், நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிந்தால், கீரைக்காரனூர் பகுதியில் உள்ள சோழப்பாடி வீரபத்திரன் கோயிலும், நீர்மட்டம் 40 அடிக்கு கீழே சரிந்தால் மீனாட்சி அம்மன் கோயிலும் தெரியும்.

இந்த பழங்கால கோயில்கள் சுட்ட செங்கற்களாலும், சுண்ணாம்பு கலவையாலும் கட்டப்பட்டவை. பழங்கால தமிழரின் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஆலயங்கள் காணப்படுகின்றன.

தற்போது, நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69 அடியாக குறைந்தது. இதனால், ஜலகண்டேசுவரர் ஆலய முகப்பில் உள்ள நந்தி சிலையின் தலை பகுதி நீருக்கு வெளியே தெரிகிறது. இதனைப் பார்க்க ஏராளமானோர் மக்கள் அங்கு சென்று வழிபட்டு பார்வையிட்டு வருகின்றனர். இதனால் வெறிச்சோடி காணப்பட்ட பண்ணவாடி பரிசல் துறையில் பொதுமக்கள் வருகை அதிகரித்திருக்கிறது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடி குறைந்ததால் தலைக்காட்டிய ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை! | Tamilnadu